ஹம்பி (Hampi) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு சுற்றுலா நகரம். மனிதன் தான் கண்ட கனவுகளை கல்லில் செதுக்கினால் எப்படி இருக்கும், கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்ற பாடலுக்கும் சொந்தமான ஊர் என்றால் அது ஹம்பிதான்.
விஜயநகரப் பேரரசின் தலைநகரமான விஜயநகரத்தில் தற்போது மிஞ்சியிருப்பது ஹம்பிதான். இந்த நகரம் இன்றும் ஒரு முக்கியமான சமயச் சிறப்பு வாய்ந்த இடமாகத் திகழ்கிறது.
ஹம்பி ஒரு நல்ல சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள விருபக்ச கோயிலும், மற்ற இந்துக் கோயில்களும் வேறு எங்கும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருக்கும். கட்டடக் கலையின் பூர்வீகம் என்று கூட ஹம்பியைக் கூறலாம். இதில்லாமல் பல்வேறு நினைவுக் சின்னங்களையும் தன்னகத்தேக் கொண்டு மிகவும் புகழுடன் விளங்குகிறது இந்நகரம்.
இப்பகுதியை யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாக அறிவித்துள்ளது. பொதுவாக விஜயநகரத்தின் நினைவுச் சின்னங்கள் பலவும், இந்த ஹம்பியின் பல்வேறு பகுதிகளில் பரந்து விரிந்து கிடக்கிறது. ஒருவர் ஹம்பிக்கு சுற்றுலா சென்று இவை அனைத்தையும் பார்த்துவிட்டு வர வேண்டும் என்றால் அங்குள்ள சுற்றுலா ஆலோசகர்களின் உதவியை நாடுவது மிகவும் நல்லது. அப்போதுதான் அவை அனைத்தையும் பார்க்க முடியும்.
ஹம்பியில் பார்க்க வேண்டிய இடங்கள் என்றால் அவை, கடலெகளு கணேசா, அரச மண்டபம், ஹேமகூடா மலைகள், விருபாட்சர் கோயில், சசிவெகளு கணேசா, ஜலாந்தர சிவலிங்கம், ஹம்பி பஜார், லட்சுமி நரசிம்ஹர், யானைக் கொட்டில், தாமரை மஹால், ஹஜாரா ராமச்சந்த்ரா கோவில், புஷ்கரிணி, விட்டலா கோவில் ஆகியவைதான்.
மேலும் இதில் தொல்லியல் அருங்காட்சியகமும் அடங்கும். கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹம்பியில் அமைந்துள்ள இந்த தொல்லியல் அருங்காட்சியகத்தில், விசயநகரத்தோடு தொடர்புடைய பல அரிய சிற்பங்களும், நினைவுச் சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. தொடக்கத்தில் இங்கு கிடைத்த சிற்பங்களும், கட்டிடக் கூறுகளும் பிரித்தானிய அதிகாரிகளால் யானைப் பந்திகளில் சேகரித்து வைக்கப்பட்டன. இந்திய தொல்லியல் ஆய்வகம் தனது முதல் அருங்காட்சியகத்தை இங்கு அமைத்தது. 1972 ஆம் ஆண்டில், இவ்வாறான தொல்பொருட்கள் கமலாப்பூரில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டன. தற்போது இந்த அருங்காட்சியகம் நான்கு காட்சிக்கூடங்களைக் கொண்டதாக உள்ளது. இந்த அருங்காட்சியக வாயிலில் விஜயநகரப் பேரரசின் புகழ் பெற்ற பேரரசரான கிருஷ்ணதேவராயர், அவரது அரசிகளினதும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
முதல் காட்சிக்கூடத்தில் சைவ சமயத்துடன் தொடர்புடைய சிற்பங்கள் உள்ளன. வீரபத்திரர், வைரவர், பிட்சாடனமூர்த்தி, மகிசாசுரமர்த்தனி, சக்தி, கணேசர், கார்த்திகேயர், துர்க்கை போன்ற கடவுளரின் சிற்பங்கள் இவற்றுள் அடங்குகின்றன. ஒரு கோயிலைப் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள நடுக்கூடம் சிவலிங்கம், நந்தி, வாயில் மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இரண்டாம் காட்சிக்கூடத்தில், ஆயுதங்கள், செப்பேடுகள், சமயத் தேவைகள் தொடர்புடைய உலோகப் பொருட்கள், பித்தளைத் தட்டுகள் போன்ற பலவகையான அரும்பொருட்கள் உள்ளன. இவற்றோடு, விசயநகரக் காலத்தைச் சேர்ந்த செப்பு நாணயங்களும், பொன் நாணயங்களும் இந்தக் காட்சிக்கூடத்தில் உள்ளன.
பல்வேறு அகழ்வாய்வுகளில் கிடைத்த முந்திய காலத்தைச் சேர்ந்த பல அரும்பொருட்களும், மத்திய கால நடுகற்கள், சாந்தினாலான உருவங்கள், இரும்புப் பொருட்கள் போன்ற அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. |
Post a Comment Blogger Facebook