இணையத்தில் உலா வருவது, பல தளங்களில் சென்று தகவல்களைத் திரட்டுவது எப்போதும் ஓர் இனிமையான அனுபவமாக இருப்பதில்லை. இணையத்தில் நுழைவதன் மூலம் பல கோடிக்கணக்கான பக்கங்களும், கோடிக்கணக்கான கிகாபைட் தகவல்களும் உங்கள் விரல் நுனிக்கு வரலாம். இவற்றில், ஏதேனும் ஒரு கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர் அல்லது குறியீடுகள், உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து, அதன் இயக்கத்தை நெறிக்கலாம்; அல்லது திசை திருப்பி விடலாம்.
பொதுவாக, நம் பிரவுசர் செயல்படும் விதத்தினை அது மாற்றும். கம்ப்யூட்டரை நாம் அறியாமலேயே கைப்பற்றி, நம்முடைய தனிப்பட்ட தகவல்களைத் திரட்டி, கெடுதல் புரோகிராமினை அனுப்பியவருக்கு அனுப்பி வைக்கும். அது மட்டுமல்ல; நம் கம்ப்யூட்டரின் மையச் செயலகமாக வடிவமைக்கப்பட்டுச் செயல்படும் ரெஜிஸ்ட்ரியை அதன் விருப்பப்படி அல்லது ஏனோ தானோ என்று மாற்றிவிடும். பின் நம் கம்ப்யூட்டர் நம் கட்டளை எதனையும் நிறைவேற்றாது. இதில் என்ன பிரச்னை என்றால், நம் கம்ப்யூட்டர் கைப்பற்றப்பட்டது நமக்கு காலம் தாழ்த்தியே தெரிய வரும். அப்படியானால், நம் கம்ப்யூட்டர் கைப்பற்றப்பட்டது என்பதனை எப்போது, எந்த செயல்களால் உணரலாம்? இங்கு சிலவற்றைக் காணலாம்.
கீழே தரப்பட்டுள்ள செயல்பாடுகளை நீங்கள் உணர்ந்தால், உங்கள் கம்ப்யூட்டர் கைப்பற்றப்பட்டு விட்டது என்பது உறுதியாகிறது.
1. நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர், நீங்கள் விரும்பாமலேயே, நீங்கள் அமைக்காத முகவரி உள்ள தளம் ஒன்றுக்குச் செல்கிறது.
2. மாறா நிலையில் நீங்கள் அமைத்த தேடல் சாதனம் மாற்றப்பட்டுள்ளது. புதிய சர்ச் இஞ்சினில், நீங்கள் எதனைத் தேடினாலும், அது புதியதாக, உருவாக்கப்பட்ட இஞ்சின் உள்ள இணைய தளத்திற்குச் செல்கிறது.
3. ஆண்ட்டி வைரஸ், ஆண்டி ஸ்பைவேர் அல்லது ஆண்ட்டி மால்வேர் தளங்களுக்கு நீங்கள் செல்கையில், நீங்கள் தடுக்கப்படுகிறீர்கள்.
4. வெப் பிரவுசரைப் பயன்படுத்துகையில், பல்வேறு பாப் அப் விண்டோக்கள் கிடைக்கின்றன. அவற்றை உங்களால், மூட இயலவில்லை.
5. புதியதாக, நீங்கள் அமைக்காத பேவரிட் தள முகவரிகள் அல்லது புக்மார்க் அமைக்கப்படுகின்றன.
6. வெப் பிரவுசர் மிகவும் மெதுவாக இயங்குகிறது.
இதிலிருந்து தப்பிக்க சில வழிகளைக் கையாளலாம். ஆனால், இந்த வழிகள் நூறு சதவீதம் உங்களைப் பாதுகாக்கும் என உறுதி அளிக்க முடியாது.
1. விண்டோஸ் சிஸ்டத்திற்கென அளிக்கப்படும் பேட்ச் பைல்களை அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள்.
2. புதிய சாப்ட்வேர் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், வேறு ஏதேனும் தேவைப்படாத சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்படுகிறதா என விழிப்பாய் இருக்கவும்.
3. தெரியாத சாப்ட்வேர் தொகுப்பினை, தேவைப்படாத சாப்ட்வேர் தொகுப்பினை, நான்கு பேர் நல்லது என்று சொல்கிறார்கள் என்பதற்காக, உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டாம்.
4. எந்த ப்ளக் இன் புரோகிராமினையும், உங்களுக்கு அது தேவை எனச் சரியாக உறுதி செய்யப்படும் முன் இன்ஸ்டால் செய்திட வேண்டாம்.
5. ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து, அவ்வப்போது அதனை அப்டேட் செய்திடவும்.
6. அதே போல, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களையும் அப்டேட் செய்திடவும்.
7. வெப் பிரவுசர் செட்டிங்ஸ் அமைப்புகளை எப்போதும் உயர்நிலை பாதுகாப்பு நிலையிலேயே அமைத்து வைக்கவும்.
8. தேவையற்ற அல்லது இனம் அறியாத இணைய தளங்களை அணுகுவதைத் தவிர்க்கவும்.
9. மேலே தரப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்த பின்னரும், உங்கள் கம்ப்யூட்டர் பாதிக்கப்படலாம்; உங்கள் பிரவுசர் கைப்பற்றப்படலாம். எனவே, நம் இணையப் பயன்பாட்டினை விழிப்போடு மேற்கொள்ள வேண்டும்.
Post a Comment Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.